திவாகரனை மடக்கியது போலீஸ்... நாளை கைது விவரத்தை மீடியாக்களிடம் அறிவிக்கிறது!      |      அடுத்த டார்கெட் மிடாஸ் மோகன்... ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி இருக்கும் மோகனை சீக்கிரமே வளைக்கிறது போலீஸ்!     |      'தானே' புயல் பாதிப்பை குறும்படமாக இயக்கி முடித்திருக்கிறார் தங்கர்பச்சான்... முதல்வருக்கு போட்டுக்காட்ட விரும்புகிறார்!     |      விஜயகாந்த் கட்சியை உடைக்க உளவுத்துறைக்கு உத்தரவு... மா.பா.பாண்டியராஜன், ராமச்சந்திரன், அருண்பாண்டியன் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வளைக்க முடிவு!      |      பொதுக்குழுவில் ஸ்டாலின், கனிமொழிக்கு எதிராக புயல் கிளப்ப அழகிரி திட்டம்!      |      தலைமைச் செயலாளர் சாரங்கியின் பதவிக்கும் ஆபத்து... முதல்வரிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார் சாரங்கி!      |      இன்னும் சில மாவட்ட செயலாளர்களை மாற்ற ஜெயலலிதா முடிவு...      |     

தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்?!

Wednesday, 1 February 2012 2 comments


த்து நாட்களாக கண்ணாமூச்சி ஆடிய திவாகரன் ஒருவழியாக போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். அவருக்கு நெருக்கமான அத்தனை வட்டாரங்களையும் ஆராய்ந்து பார்த்து சலித்துப்பூன போலீஸ் அதிகாரிகள் கடைசியாக, திவாகரன் குடும்பத்தினரையே நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மிரட்டத் தொடங்கினார்கள். அதற்கு உரிய பலன் உடனடியாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்துக்கு வெளியே பதுங்கி இருந்த திவாகரன் போலீஸ் அதிகாரிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசிவிட்டார். என்னென்ன வழக்குகள் போடுவீர்கள் என்பதைச் சொன்னால்தான் உங்களின் நடவடிக்கைக்கு உடன்படுவேன் என திவாகரன் சொல்ல, அதிகாரிகள் வழக்கு குறித்து விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, இன்றோ நாளையோ திவாகரன் கைது விவகாரம் உறுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

- கும்பல்

மகளிரணிக்கு கனிமொழி... இளைஞ்ரணிக்கு மகேஷ்!

Tuesday, 31 January 2012 2 comments

மகளிரணிச் செயலாளர் ஆகிறார் கனிமொழி!


அண்ணன்களின் தடை, அப்பாவின் தயக்கம் அனைத்தையும் கடந்து தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பு கனிமொழியின் கைக்கு கிடைக்க இருக்கிறது. திகார் சிறையில் 150 நாட்களைக் கடந்து வெளியே வந்த கனிமொழிக்கு கட்சியில் மிக முக்கிய பதவி கிடைக்கும் என பரவலான பேச்சு எழுந்தது. 'கனிமொழிக்கு கொடுப்பதாக இருந்தால், எனது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பையே விட்டுக் கொடுக்கிறேன்' என அறிவித்தார் சற்குண பாண்டியன்.

துணைப் பொதுச் செயலாளர், இளைஞ்ரணி பொதுச் செயலாளர் என பல பதவிகள் கனிமொழிக்காக பரிசீலிக்கப்பட்டன. இதற்கிடையில், கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடுமோ என அஞ்சிய ஸ்டாலின், உடனடியாக தமிழகம் முழுக்க வலம் வந்தார். இளைஞ்ரணி பொறுப்புக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களே வரவேண்டும் என அதிரடி உத்தரவும் பிறப்பித்தார். கனிமொழிக்கு செக் வைக்கும் விதமாகவே இவை அனைத்தும் நடந்தது.

ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகனான மகேஷுக்கு இளைஞ்ரணி செயலாளர் பொறுப்பு கிடைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்திருக்கிறார். தனது மகன் உதயநிதிக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்தால், அது வாரிசு அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.


கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடாதபடி எப்படி ஸ்டாலின் தடுத்தாரோ... அதேபோல் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது என அழகிரி தடுத்தார். அதனால், கனிமொழிக்கு மகளிரணி செயலாளர் பதவி கொடுக்க கருணாநிதி முடிவெடுத்திருக்கிறார்.

தி.மு.க.வின் மிக முக்கிய வட்டாரங்களே இந்த செய்தியை நம் கும்பல் குழுமத்துக்கு உறுதிபடுத்தி சொல்கிறார்கள். மகளிரணி பொறுப்பு சாதாரணமானது தான் என்றாலும், கனிமொழிக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் தான் அது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அடுத்தபடியாய்
கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் தான் கட்சியைக் கைப்பற்றும் போட்டி நடக்கும் என்கிறார்கள் சீனியர் புள்ளிகள்.

- கும்பல்

மோசத்துக்குரிய பாரதிராஜா...

Monday, 30 January 2012 2 comments



பாரதிராஜா சார்... உங்களின் படத்தை விட 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்' என்கிற உங்களின் குரலை அதிகம் ரசித்தவன் நான். வழக்கத்தைத் தாண்டிய அன்பும் வாஞ்சையும் அந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கும். கோபக்கார பாரதிராஜா இந்த வார்த்தைகளை மட்டும் எப்படி குழந்தைத்தனமாக சொல்கிறார் என பல நேரங்களில் நான் நினைத்ததுண்டு. உங்களின் வார்த்தைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமற்ற போக்கு அப்போதே எனக்குப் புரிந்ததோ என்னவோ... அதனால் கூட எனக்கு அந்த ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம்.

சரி, விசயத்துக்கு வருகிறேன்... உங்களிடத்தில் யாரும் மாற்றுக் கருத்துப் பேசினால் உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்கும் தெரியும். உங்களை மிக நெருக்கமாக நான் பார்த்திரா விட்டாலும், அடிக்கடி பார்த்திருக்கிறேன்... ரசித்திருக்கிறேன்... வியந்திருக்கிறேன்.அதனால், உங்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நான் இங்கே முன்வைக்கப் போவதில்லை. முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லை... காரணம்... இப்போதெல்லாம் உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்து வைத்துக் கொள்கிறீர்கள். முகத்தை உயர்த்தி 'என்னைய்யா...' என அடர்ந்த குரலில் நீங்கள் கணைப்பது காதில் கேட்கிறது... உங்களின் சமீபத்திய தலைகீழ் மாற்றங்களை பட்டியல் போடுகிறேன்... இதை முழுதாகப் படித்த பிறகுதான் உங்கள் தலைகீழ் மாற்றமும், தடுமாற்றமும் (நான் அதை சொல்லவில்லை) உங்களுக்கே புரியவரும்!


ஈழ விவகாரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேன்... நீங்கள் தேசியத் தலைவர் பிரபாகரனை நேரில் சென்று பார்த்தவர். அந்த சிலிர்ப்பு நிமிடங்களை சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தவர். பல வருடங்களுக்கு முன்னாள் நீங்கள் விகடனில் கொடுத்த அந்த பேட்டி அப்படியே என் நினைவில் நிற்கிறது. ஈழப் போர் நடந்தபோது ஈழப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத காங்கிரசையும் தி.மு.க.வையும் கடுமையாக திட்டினீர்கள். பிலிம் சேம்பர் வளாகத்தில் கூட்டம் போட்டு, இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கினீர்கள். மத்திய அரசு கொடுத்த மகத்தான விருதை டெல்லிக்கு திருப்பி அனுப்பி, தமிழனின் மானத்தை காத்தீர்கள். எந்த மறத்தமிழனும் செய்யத் துணியாத காரியம் அது. மத்திய அரசின் விருதை ஒருமுறை திருப்பி அனுப்பினால்,அதன் பிறகு அப்படி ஒரு அங்கீகாரத்தை நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதை நன்றாகவே அறிந்திருந்தும் நீங்கள் கோபப்பட்டது பேராச்சரியம்.

அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்கு எதிராக இந்தளவுக்குக் கொந்தளித்த நீங்கள், சமீபத்தில் மதுரையில் நடந்த 'திரும்பிப் பார்க்கிறேன்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் என்ன பேசினீர்கள்? நீங்களும் உங்களின் குடும்பப் பாரம்பரியமும் காங்கிரசிலேயே ஊறி வளர்ந்ததாக நீங்கள் வரலாறு சொன்னதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். ஆனால், தமிழர்களின் நலன்காக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என நீங்கள் முழங்கிய வார்த்தைகளைத்தான் இப்போதும் நம்ப முடியவில்லை.


காங்கிரசை இந்தளவுக்கு நம்பிக்கையாகப் பார்க்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு எதற்காக உங்களின் விருதை தூக்கி வீசினீர்கள்? எதற்காக காங்கிரசை கருவறுக்க வேண்டும் என முழக்கம் செய்தீர்கள்? ஒருவேளை இரண்டே வருடங்களில் உங்களின் இதயத்தைக் குளிர்விக்கும் அளவுக்கு காங்கிரசின் கண்ணியமும் தமிழனைக் காக்கும் கடமை உணர்வும் பெருகிவிட்டதா? இல்லை, தங்கபாலு மாற்றப்பட்ட பிறகு காங்கிரசின் தலைவிதிதான் மாறிவிட்டதா?

இன்றைக்கு இந்தளவுக்கு காங்கிரசுக்கு சான்றிதழ் கொடுக்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு, உங்களின் அலுவலகம் சுக்குநூறாக நொறுக்கப்பட்டபோது, அதைச் செய்தவர்கள் யார் எனத் தெரிந்தும் அவர்களைக் குறிப்பிட்டு புகார் எழுத முடியாமல் விக்கித்து நின்றீர்களே... அன்றைக்கு இந்த நாட்டை ஆண்டதும் இதே காங்கிரஸ்தானே... உங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது காங்கிரஸ் கயவர்கள் இல்லை என்று இப்போது உங்களால் மறுக்க முடியுமா? உங்களின் அலுவலகத்தைப் பார்த்து நீங்கள் பதறியதும், காங்கிரசுக்கு எதிராகக் கொந்தளித்ததும்... உங்களுக்காக ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.


சரி, காங்கிரஸ் விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு மாறியது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது... கைம்மாறு நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சீமானை பாராட்டி நீங்கள் எப்படி எல்லாம் பேசினீர்கள் என்பதற்கு இப்போதும் யூ ட்யுப் ஆதாரமிருக்கிறது. ஆனால்,சமீபத்தில் சீமானைப் பற்றி நீங்கள் பேசியது என்ன? ஈழ விவகாரத்துக்காக ராமேஸ்வரத்தில் நீங்கள் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி சீமான் அரசியல் ஆதாயம் தேடிவிட்டதாக பரபரப்பு பேட்டி கொடுக்கின்றீர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை அப்பா என சொல்லும் அந்த மகத்தான மகனை இவ்வளவு இழிவாக நீங்கள் இடித்துரைத்தது ஏன்? உங்களின் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் அந்தணக் கூட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்தியிருக்காவிட்டால் சீமான் என்கிற தலைவன் தமிழகத்தில் தோன்றியிருக்க மாட்டானா? நீங்கள் போட்ட பிச்சையில்தான் அந்த பிரளய வீரன் பிறந்தானா?


சரி, அடுத்த விசயத்துக்கு வருகிறேன்... சமீபத்தில் இயக்குனர் சங்கத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டிர்கள்... உங்களை எதிர்த்து அமீர் நிற்க... உடனே உங்களுக்கு கடுமையான ஆத்திரம். 'அமீரும் சேரனும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' என பரபரப்பு பேட்டி கொடுத்தீர்கள். அடுத்த சில நாட்களிலேயே பதவியேற்பு... அமீரைக் கடுமையாக வசைபாடி உங்களின் ஆதரவாளர் பாலு தேவர் மூலமாக பரபரப்பு போஸ்டர் அடித்தீர்கள்.

அடுத்த சில நாட்களில் என்ன அதிசய மாற்றமோ... 'அமீர்தான் என் படத்துக்கு ஏற்ற கதாநாயகன். அப்படியே நச்சுன்னு பொருந்தி இருக்கான்!' எனச் சொல்லி உங்களின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு அமீரை கதாநாயகனாக்கி பாராட்டு மழை பொழிந்தீர்கள். இயக்குனர் சங்கத் தேர்தலின்போது உங்களுக்காக அமீரை பகைத்துக் கொண்டவர்கள் உங்களின் தலைகீழ் பல்டியைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். (இதற்கிடையில் நீங்கள் பார்த்திபனை ஏமாற்றிய கதையையும் நினைவில் ஓட விட்டுப் பாருங்கள்)


அடுத்து என்ன நடந்ததோ... 'இயக்குனர் சங்கத்துக்கு நான் தலைவரா... இல்லை அந்த அமீர் பயலா?' என ஆவேசமாக சத்தம் போட்டீர்கள். உங்களை மோசம் செய்ததாக சுட்டிக் காட்டிய சேரனை நேரில் வரச் சொல்லி, அமீருக்கு எதிராக பேட்டி கொடுக்கச் சொன்னீர்கள். சீக்கிரமே உங்களின் படத்திலிருந்து அமீரை மாற்றப் போவதாகவும் நெருக்கமானவர்களிடம் சொல்கிறீர்கள்.


உங்களுக்கு என்னய்யா ஆகிவிட்டது...? உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்துப் பேசும் ஆளாக நீங்களே மாறிப்போனது ஏன்? காங்கிரஸ் தொடங்கி நேற்றைக்கு வந்த அமீர் வரை நீங்கள் ஏன் எந்த விவகாரத்திலும் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் குழப்புகின்றீர்கள்? ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... காங்கிரசை ஆதரித்து நீங்கள் பேசியது காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. காங்கிரசின் வெறித்தனபோக்கால் ரத்த உறவுகளை பறிகொடுத்துத் தவிக்கும் அத்தனைத் தமிழர்களையும் உங்களின் குரல் பொசுக்கிப் போட்டிருப்பது உங்களுக்குப் புரியுமா? அமீரை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் சேரனைத் தூண்டி விடுகிறீர்களே... அமீர் என்கிற ஒருவரைப் பழிவாங்க 23,000 தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் உங்களின் வஞ்சகத்தை எப்படியய்யா மன்னிப்பது?


இன்று ஒரு பேச்சு... நாளை ஒரு பேச்சு என நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களின் நாவை இஷ்டத்துக்கு மாற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், இனியும் 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்...' என்கிற பசப்பு வார்த்தைகளை உச்சரிக்காதீர்கள். இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன்... மனம் முழுக்க அவ்வளவு கோபம் இருக்கிறது. ஆனால், எங்களின் அடையாளமாகவும், ஆழ்மனம் கொண்டாடும் அற்புதப் படைப்பாளனாகவும் இருக்கும் உங்களை இத்தோடு விட்டுவிடுகிறேன்.

இப்படிக்கு,

வாஞ்சை என எண்ணி உங்களின் வஞ்சகத்தை அறிந்த ஒருவன்

சிக்கிய ராவணன்... கக்கிய மர்மங்கள்!

Sunday, 29 January 2012 2 comments

ராவணன் திகில் வாக்குமுலம்!


ஜெயலலிதாவின் இரண்டு டார்கெட்டில் ஒன்று சாதிக்கப்பட்டு விட்டது... கோவை ராவணன் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். என்னதான் போலீஸ் விரட்டி விரட்டிப் பிடித்தாலும், அவர் முகத்தில் சிறிதும் வாட்டமில்லை. ஏதோ சாமியார்கள் ஜெயிக்குப் போகும் காட்சியைப் போல் சிரித்த முகத்துடனேயே உள்ளே போனார்.


அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் அர்த்தங்கள் அதிகம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். சசிகலா கார்டனை விட்டு வெளியே அனுப்பப்படுவதற்கு பத்து நாட்கள் முன்பு வரை எதற்கெடுத்தாலும் ராவணன் பெயர்தான் அடிபட்டது. 'நான் ராவனன்கிட்ட சொல்லிட்டேன்... அவர் பார்த்துக்குவார்' என கட்சிக்காரர்களிடமே ஜெயலலிதா சொல்வார். ஜெயலலிதா பெயர் சொல்லி அழைக்கும் மிகச் சிலரில் ராவணன் மிக முக்கியமானவர்.

'அம்மாவின் குணம் தெரிந்து நடப்பவர்' என கட்சிக்காரர்களின் பாராட்டுக்கும் உரியவர் ராவணன். இருந்தும் எப்படி இந்தளவுக்கான சிக்கலில் அவர் மாட்டினார்? எதற்கெடுத்தாலும் ஜாதகம் பார்ப்பது ராவணனின் வழக்கம். எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும், அதை ஜாதக ரீதியான ஆராய்ச்சி நடத்தித்தான் செய்யத் தொடங்குவார். கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அவர் ஜாதகம் பார்த்த போதுதான் சிக்கல் தொடங்கியது. 'பிரமாதமான ஜாதகம்... ஒரு அரசனுக்கு உரிய ஜாதகம் இது. நிச்சயம் இந்த ஜாதகத்தைக் கொண்டவர் சீக்கிரமே அரசாளுவார்' என சொல்லப்பட்ட, அதுவரை அடக்கி வாசித்த ராவனனனுக்கு திடீர் ஆசை தொற்றிக்கொண்டது.


இதற்கிடையில் பெங்களுரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என உறுதியாக நம்பிய மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி) தானே முதல்வராக மகுடம் சூட்ட ஆசைப்பட்டார். தன் மனக்கிடக்கையை அக்காவிடம் சொன்னார். அதற்கான வேளைகளில் தீவிரமானார். எம்.எல்.ஏ.க்கள் , அமைச்சர்கள் என கட்சிக்காரர்களை வளைக்கும் வேலைகளை செய்யத் தொடங்கினார்.


கொழுந்தன் ராவணனா.. தம்பி திவாகரனா ... என்பதில் தான் சசிகலாவுக்கு திண்டாட்டம் தொடங்கியது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் யார் முதல்வராவது என சசிகலா உறவுக்காரர்கள் நடத்தும் போட்டி உச்சகட்டத்தை எட்டிய போதுதான் விஷயம் முதல்வருக்குப் போனது. உளவுத்துறை பதிவு செய்திருந்த உரையாடலைக் கேட்டு ஆடிப்போனார் முதல்வர்.


அதன் பிறகுதான் சசிகலா வகையறாக்களை வெளியேற்றும் வேலைகள் கடகட வேகத்தில் நடந்தன. முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட திவாகரனையும் ராவணனையும் வளைக்க உத்தரவானது. போலீஸ் நடத்திய முதல்கட்டத் தேடுதலில் இருவரையும் நெருங்கவே முடியாத நிலை. அடுத்தபடியாய் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் முலமாக போலீஸ் சில விசயங்களை கசியவிட்டது. 'சரண்டரானால் கண்ணியமாக நடத்துவோம். தேடிப்பிடிக்கிற நிலை வந்தால் மிகக் கேவலமாக நடத்தச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது' என சொல்ல, ராவணனுக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. போலீஸ் தரப்புடன் அவரே பேச்சுவார்த்தை நடத்த... கைது வைபோகம் நடந்தது.

ஆனால், திவாகரன் போலிசின் பசப்பு வேலைகளுக்கெல்லாம் பணியவில்லை. முடிந்தால் பிடித்துபார் என்பதுதான் அவர் பாணி. இதற்கிடையில், சிறையில் இருக்கும் ராவணன் அதிகாரிகள் தரப்பில் அள்ளிவிடும் செய்திகள் பயங்கரமாக இருக்கிறதாம். 'அம்மா சொன்ன எத்தனையோ வேலைகளை நான் செஞ்சிரிக்கேன். அதையெல்லாம் பட்டியல் போட்டா அவங்க தாங்குவாங்களா? நீங்க என்ன கேசை வேணும்னாலும் போட்டுக்கங்க... கொலை , கொள்ளை, செக்ஸ்னு என்ன செக் ஷன் வேணும்னாலும் போட்டுக்கங்க. நான் பார்த்துக்குறேன்' என சர்வ சாதாரணமா சொல்லி வருகிறார் ராவணன். அதனால், அவரை எப்படி டீல் செய்வதெனத் தெரியாமல் ஆடிக்கிடக்கிறார்கள் அதிகாரிகள்.

இன்னொருபுறம் திவாகரனின் கண்ணாமூச்சி வேலைகளும் அதிகாரிகளை அல்லாட வைத்தபடி இருக்கின்றன. 'இரண்டு நாட்களுக்குள் திவாகரனை பிடிக்க முடியாவிட்டால் யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வீட்டுக்கு போய்விடுங்கள்' என ஜெயலலிதா ஆவேசமாக சத்தமிட்டதாகவும் சொல்கிறார்கள். மொத்தத்தில் ராவணனின் கித்தாய்ப்பு பேச்சும், திவாகரனின் தலைமறைவு மிரட்டலும் ஆளும்கட்சியை அலறவைத்திருப்பது உண்மை!


பின்குறிப்பு: இதற்கெல்லாம் அடுத்தபடியாக சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனையும் கைது செய்ய உத்தரவு வரும் என்கிறார்கள்.

- கும்பல்




சீமானுக்கு மீண்டும் சிக்கல்?!

Saturday, 28 January 2012 1 comments


சீமானின் சமீபத்திய மேடைப் பேச்சுகள் ஆளும் அரசுக்கு எதிராக திரும்பி வருகிறது. இதனைக் கவனமாக பதிவு செய்து மேலிடப் பார்வைக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது உளவுத்துறை. இதன் பின்னணியில் தான் ராமேஸ்வரம் வழக்கை மீண்டும் போலீஸ் கையிலெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் தூக்கியடிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என இந்த ஆட்சியின் சமீபத்திய குளறுபடிகளை மேடைகளிலும், மீடியாக்களிலும் ஆவேசமாகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார் சீமான். சசிகலா விவகாரத்தையும் அவர் விட்டுவைக்காமல் விளாசுவதால், கடுப்பிலிருக்கும் ஆளும் கட்சி சீமான் மீது சீக்கிரமே பாய்ச்சலைக் காட்டும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தினர். பாயும் புலி பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய அக்கறையும்!

''நம்புங்க, நானும் ஒரு தொழிலாளி'' -இது சேரன் ஸ்டேட்மென்ட்

Friday, 27 January 2012 2 comments

பெப்சி - தயாரிப்பாளர் சங்க மோதலில் இயக்குனர் சேரனின் பெயரும் சிக்கித் தவிக்கும் நிலையில், சேரன் அனுப்பி இருக்கும் விளக்கக் கடிதம்...

(சேரனின் கடிதத்தைப் பெரிதாக்கிப் படிக்க விரும்புபவர்கள் அங்கே டபுள் க்ளிக் செய்யவும்)





''என் தந்தைக்காக சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன்!" விஜய் திடீர் அறிவிப்பு

1 comments




தயவுசெய்து மன்னிக்கவும்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?! ஆனால், தயாரிப்பாளர்களின் வேதனையை சொல்லிச் சொல்லி கண்ணீர் விடுகிற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனிடம் சம்பளத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தலாமே...

தினக்கூலிகளை போல அன்றாட வாழ்க்கையைக் கழிக்க அல்லாடிவரும் பெப்சி தொழிலாளர்கள் மூன்று சதவீத ஊதிய உயர்வை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கம், சம்பள உயர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை... பிடிவாதம் பிடித்தால் நாங்கள் வெளிமாநில தொழிலாளர்களை வைத்து ஷூட்டிங் நடத்துவோம் என அறிவித்தது. அதனை இயக்குனர் சேரன் உள்ளிட்ட சிலர் ஆதரித்தார்கள். பெப்சி செயலாளர் சிவாவை கண்டித்தார்கள். பெப்சிக்கு ஆதரவாக இருக்கும் இயக்குனர் அமீரை எச்சரித்தார்கள்.


'பிரச்னை எல்லை மீறிப்போனால் நான் முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவேன்' என இப்போது மிரட்டத் தொடங்கி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏதோ, இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதே இவர்தான் என்பதைப் போல தொடர்ந்து தொட்டதற்கும் முதல்வர் பெயரைப் பயன்படுத்தி வருகிறார் எஸ்.ஏ.சி. சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்து இவர் உண்மையாகவே கவலைப்படுபவராக இருந்தால், தன் மகன் விஜயை சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க வைத்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை வாழ வைக்க வேண்டியதுதானே... தயாரிப்பாளர்களின் நலன் கருதி விஜய் ஒருவர் சம்பளத்தைக் குறைக்க முன்வந்தால், ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் சம்பள குறைப்பை அறிவிக்க வேண்டிய கட்டாயம் வருமே... விஜய் நடிக்கும் படத்தால் தான் எந்த புண்ணியமும் இல்லை... அவர் எடுக்கிற இந்த முடிவாவது புண்ணியமாக போகட்டுமே...


தன்னை கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவராகக் காட்டிக் கொள்ளும் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்படி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அக்கிரமத்தை செய்யலாமா? லைட்மேன்கள் வாழ்வில் இதுகாலம் வரை என்ன உயர்வு ஏற்பட்டு இருக்கிறது என்பது இவருக்குத் தெரியாதா? சம்பளம் இப்போதே அதிகம் என எஸ்.ஏ.சி சொல்கிறாரே... எங்களுக்கு மாதத்தில் முப்பது நாட்களும் வேலை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் யார் என்பதையும் நீங்களே சொல்லுங்கள். அஞ்சோ பத்தோ நாட்களில் வேலை பார்த்து, அதனை வைத்து வாடகை, படிப்பு, வைத்தியம் என எங்களின் நாட்களை நாங்கள் நடத்துவதற்குள் எவ்வளவு கஷ்டங்களை கடக்கிறோம் என்பது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தெரியுமா?


கோடிக்கணக்கில் கருப்பு பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களுக்கு எங்களின் அவஸ்தைகள் ஒருபோதும் புரியாது. ஆனால், நாங்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினால், உங்களின் வீடு வாசல்கள் என்னாகும் என்பதை மட்டும் ஒருகணம் நினைத்துப் பாருங்கள். நசுக்கப்பட்ட தொழிலாளர்கள்தான் உலகளாவிய எழுச்சிக்கு வித்திட்டவர்கள். அத்தகைய எழுச்சிக்கு எங்களை நீங்களே ஆளாக்கி விடாதீர்கள்!

-மனோன்மணியன்


அம்மா அடுத்த அதிரடி!

Thursday, 26 January 2012 3 comments



ழக்கம்போலவே அடுத்த மாற்றமும் நடந்து இருக்கிறது... அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி இருவரும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிய அமைச்சர்களாக திருச்சி சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.




அடுத்த அதிரடியாக சசிகலாவின் உறவு வட்டாரம் மீது உக்கிரத்தைக் காட்டி இருக்கிறார் ஜெயலலிதா. எம்.நடராஜனின் அக்கா வைஜெயந்தி, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம், அவருடைய மனைவி, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவு வெளியாகி இருக்கிறது.



கோவை ராவணனுக்கு நெருக்கமான வேலுமணியின் மாவட்ட செயலாளர் பதவியும் அதிரடியாகப் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சசிகலாவின் தம்பி திவாகரனை விரட்டிப் பிடிக்கும் வேலைகளும் ஏக தீவிரத்தில் நடந்த வண்ணம் இருக்கிறது.



நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை பொறுப்பும் சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு, பூங்குன்றனும், மருதுராஜ் என்பவரும் நிர்வாகத்துக்கு நியமிக்கப்பட்ட இருக்கிறார்கள்.இதில், உச்சபட்சமாக நடக்க இருக்கும் அதிரடியாக உளவுப்புள்ளிகள் சொல்லும் விசயம்தான் கண்ணைக் கட்டுகிறது. திவாகரன், ராவணன் இருவரையும் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போலீசார் முதல்வருக்கு அவர்கள் இருவரையும் பற்றிய கம்ப்ளீட் ரிப்போர்டை கொடுத்து இருக்கிறார்களாம். 'நீங்களாக வந்து சரணடையுங்கள்... இல்லையேல் சசிகலாவையே அரெஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்' என சசிகலாவின் சொந்தங்களிடம் இப்போது சொல்ல ஆரம்பித்து இருக்கிறது போலீஸ். சசிகலா மீது கைவைக்கவும் போலீசுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டாராம் முதல்வர்.


அடுத்தடுத்த அதிரடிகள் தமிழ்நாட்டையே கதிகலங்க அடிக்கும் என உறுதியாக சொல்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள் சிலர். பொறுமையின் எல்லை கடந்து அமைதி காக்கும் மன்னார்குடி உறவுக்காரர்கள் பதிலடியாக ஏதும் செய்வார்களா? இல்லை, பம்மியபடியே அமைதி காப்பார்களா? என்பதுதான் அரசியல் அரங்கின் புதிரான கேள்வி!

-கும்பல்

சீமான் - தீரன் பிரிந்தது ஏன்?

1 comments



நாம் தமிழர் கட்சியை சீமான் ஆரம்பித்த போது பல இயக்கங்களில் இருந்தும் அவரிடத்தில் வந்து நிறைய பேர் சேர்ந்தார்கள். சிலரை அடையாளம் கண்டு சீமானே தவிர்த்தார். சிலரை அவரே கைகொடுத்து வரவேற்றார். அதில், முக்கியமானவர் தீரன். பா.ம.க.வில் இருந்து பிரிந்து தனித்து இருந்த தீரன் நாம் தமிழர் இயக்க மேடைகளில் முழங்கத் தொடங்கினார். முக்கியமான அறிக்கைகளைத் தயார் செய்து கொடுக்கும் வேலையையும் செய்தார்.

இடையில், அவருக்கும் சீமானுக்கும் என்ன கசப்பு ஏற்பட்டதோ... வேல்முருகன் புது இயக்கம் தொடங்க போகும் விஷயம் தெரிந்து அதில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார் தீரன். அதோடு விட்டிருந்தால் தேவலாம். ஆனால், சீமானுக்கு எதிராக பேசவும் தீரன் தீவிரமாக, இதற்கு பதிலடி கொடுக்க நாம் தமிழர் இயக்கமும் தயாராகி விட்டது.


''நாம் தமிழர் இயக்கம் ஐயா தீரனுக்கானது அல்ல... அவருடைய பேரனுக்கானது!" என பதிலடி கொடுத்திருக்கிறார் சீமான். அடுத்தபடியாய் தீரன் ஏதாவது பேசினால் அதற்கு மிகக் கடுமையான பதில்கள் இருக்கும் என்பதை சீமானின் தம்பிகள் உரத்து சொல்லி வருகிறார்கள். இந்த மோதல் சீமானுக்கும் வேல்முருகனுக்குமான மோதலாக உருவெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

- kumbal

அமீருக்கு செக் வைக்கும் சேரன்!

Wednesday, 25 January 2012 11 comments


பெப்சி தொழிலாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குமான மோதல் இயக்குனர்கள் சேரனுக்கும் அமீருக்குமான மோதலாக மாறி விட்டது. பெப்சிக்கு ஆதரவாகப் பேசிய அமீரை தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் கடுமையாகக் காய்ச்சி எடுத்தார் சேரன். அடுத்தபடியாய் இயக்குனர் சங்க நிர்வாகிகளை ஒன்று திரட்டும் முயற்சியிலும் தீவிரமாக இருக்கும் சேரன், பொதுக்குழுவைக் கூட்டி, அமீரை இயக்குனர்கள் சங்க செயலாளர் பதவியில் இருந்து நீக்கவும் தயாராகி வருகிறார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமீருக்கு எதிராக வாக்களித்தால், அவரை நீக்குவது சாத்தியம்தான். ஆனால், இன்றைய நிலையில் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.


சேரனின் சிஷ்யப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி இயக்குனர் சங்க துணைத் தலைவராக இருக்கிறார். சேரனும் அதே பதவியில் தான் இருக்கிறார். ஆனால், சேரனின் கூக்குரலுக்கு சமுத்திரகனியே தலையாட்டும் நிலையில் இல்லை. இயக்குனர்கள் சங்கத் தலைவராக இருக்கும் பாரதிராஜா சேரனுக்கு ஆதரவாக இருக்கிறார்.


இதற்கிடையில் தான் சேரனுக்கு அடுத்த யோசனை தோன்றி இருக்கிறது. சங்கத்தின் பொறுப்பை விட்டு நீக்க முடியா விட்டாலும், பாரதிராஜா இயக்கம் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இருந்து அமீரை நீக்குவது சுலபம் தான் என நினைக்கிறார் சேரன். இது பற்றி அவர் பாரதிராஜாவிடம் சொல்ல, கிட்டத்தட்ட அவரும் அதற்குத் தலையாட்டி விட்டதாகச் சொல்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அமீரின் அஸ்திரம் வேறு மாதிரியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சில மன வருத்தங்களால் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அனுப்பினார் சேரன். ஆனால், அதனை ஏற்காமல் அவரை சமாதானப்படுத்த அமீர், ஜனநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வந்தார்கள். அதனால், அந்தக் கடிதம் ஏற்கப்படாமலே இருந்தது. இப்போது அந்தக் கடிதத்தை கையில் எடுத்து இருக்கிறார் அமீர்.


'தனிப்பட்ட வேலைகளின் காரணமாக சேரன் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார். அதனை ஏற்று அந்தப் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்கிறோம்' என அறிவிக்க இருக்கிறாராம் அமீர். யார் யாரை வீழ்த்துவது என்கிற போட்டி அதிதிவிரமாகவே நடக்கத் தொடங்கி இருக்கிறது. இருபதாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் தினக்கூலி பிரச்சனை இப்படியா திசைமாறிப் போகவேண்டும்? அமீரும் சேரனும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது.


திரைப்படத் தொழில் எந்தளவுக்கு நசிந்து வருகிறது என்பதை அமீர், சேரன் இருவருமே மறுக்க முடியாது. பெப்சி தொழிலாளர்கள் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் சேரன். ஐயா... சேரன் அவர்களே... இந்த வார்த்தைகளை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அருகில் அமர்ந்தபடி சொல்கிறீர்களே... ஹீரோக்களின் சம்பளம் விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்து வருகிறதே... இதுபற்றி எஸ்.ஏ.சி.இடம் எடுத்துச் சொல்லி இளைய தளபதி விஜயின் சம்பளத்தை குறைக்கச் சொல்லி இருக்கலாமே... ஹீரோ, ஹீரோயின், இசையமைபாளர்களால் ஆகாத செலவா பெப்சி தொழிலாளர்களால் உருவாகிறது? கோடிகளில் ஜொலிக்கும் புன்னியவாங்களிடம் கேட்க வேண்டிய குறைப்பை கூலித் தொழிலாளர்களிடம் கேட்பதுதான் சேரனின் நியாயமா?


அதேநேரம் அமீரிடத்திலும் நமக்கு ஆதங்கம் இருக்கிறது... நீங்கள்தானே இயக்குனர் சங்க செயலாளர். 'அமீர் தவறுதலாக பேசிவிட்டார்' என இயக்குனர் சங்க துணைத் தலைவரான சேரனே மீடியாக்கள் மத்தியில் பேசுகிறார் என்றால், நீங்கள் அதனை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்கள? ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலமாகவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் சொல்கிறீர்கள்... வாஸ்தவம்தான்... திவாகரனை தேடிப் பிடிப்பதிலும், மகாதேவனை மடக்குவதிலுமே அக்கறையாக இருக்கும் இந்த அரசாங்கம் எப்போது உங்களுக்காக அதிகாரியை நியமித்து ஆக்க்ஷன் எடுக்கும்?


பல படபிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு பலரும் தவியாய்த் தவிக்கும் வேளையில் இயக்குனர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நீங்கள் உடனடித் தீர்வுக்கு வழி காண வேண்டும். உங்களின் அதிரடியான பேச்சையும், ஆக்ரோஷமான நடவடிக்கையையும் நம்பித்தான் ஆயிரக்கணக்கானவர்கள் உங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் போராட்டம் பெரிதாக உருவெடுக்காமலும்... அதேநேரம் படைப்பாளிகளும் பாதிக்காத படியும் உடனடி நடவடிக்கை எடுக்க சங்கத்தை கூட்டி உடனே ஆலோசனை நடத்துங்கள். தொழிலாளர்களை வீதிக்கு இறங்க விட்டால், அதன் பிறகு ஆயிரம் அமீர்கள் வந்தாலும் அவர்களை அமைதிபடுத்த முடியாது. ஏழையின் வயிறு எரிகிற தீக்கு சமம் என்பதை எல்லோரும் உணர வேண்டிய நேரம் இது!

- கும்பல்

கார்டனில் திவாகரனின் வளர்ப்பு மகன்!

Tuesday, 24 January 2012 0 comments



சிகலாவின் தம்பி திவாகரனை கைது செய்ய போலீஸ் தீவிரமாக இயங்கி வருகிறது. மன்னார்குடி மட்டுமல்லாமல், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ரகசிய போலீஸ் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகிறது. ''இரண்டு நாட்களில் திவாகரனை எப்படியாவது கைது செய்யுங்கள்" என முதல்வர் ஜெயலலிதா அதிகாரத் தரப்பின் முக்கியப் புள்ளிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.


இந்தளவுக்கு திவாகரன் மீது ஜெயலலிதா கோபமாக என்ன காரணம் எனத் தெரியாமல் திண்டாடித் தவிக்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். கட்சிக்காரர்களுக்கும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்களைத் திரட்டி, ஆட்சியைக் கவிழ்க்க திவாகரன் திட்டமிட்டதாகவும், அதனால்தான் அவரை உடனடியாக கைது செய்ய ஜெயலலிதா வேகம் காட்டுவதாகவும் பரபரப்பு செய்திகள் கிளம்புகின்றன. ஆனால், உண்மையான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது என்பதே நிஜம்.


திவாகரன் மீது இந்தளவுக்கு கோபமாக இருக்கும் ஜெயலலிதா அவருடைய வளர்ப்பு மகன் விவேக்கை மட்டும் எப்படி கார்டனில் தங்க வைத்திருக்கிறார் என்பது தான் பலருக்கும் புரியாத கேள்வி. இளவரசியின் மகனான விவேக் தான் திவாகரனின் வளர்ப்பு மகன். ஆஸ்திரேலியாவில் படித்தவரான விவேக் கடந்த வருடம் தான் தமிழ்நாட்டுக்கு வந்தார். திவாகரனின் மகனும் விவேக்கும் எப்போதும் ஒன்றாக வளம் வருவார்கள். திவாகரனின் வீட்டில் விவேக்கும் திவாகரன் மகனும் ஒன்று சேர்ந்து இருக்கிற புகைப்படம் பெரிதாக இருக்கும். நெருங்கிய உறவுக்காரர்களுக்கு மட்டுமே விவேக் திவாகரனின் வளர்ப்பு மகன் என்பது தெரியும்.

தற்போது கார்டனில் இருக்கும் விவேக், திவாகறனைக் காப்பாற்ற பெரிதாக முயல்வதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் சிலரோ 'மேடம் என்ன செய்தாலும் சரியாத்தான் செய்வாங்க... அதில், தலையிடுகிற அளவுக்கு நான் பெரிய மனிதன் இல்லை' என திவாகரனுக்காக பேசியவர்களிடம் கறாராக சொல்லி விட்டார் விவேக் என்றும் சொல்கிறார்கள்.


ஜெய - சசி நட்பை பொருத்த மட்டில் இருவருக்கும் இடையே நடக்கும் எல்லாமே ரகசியம் தான். அப்படியிருக்க, திவாகரன் துரத்தப்படுவதற்கும், விவேக் கார்டனிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதற்கும் என்ன பின்னணி என்று யாருக்குத் தெரியும்?

- கும்பல்

சசிகலா தம்பி கைதாகிறார்?

Saturday, 21 January 2012 2 comments



மன்னாதி மன்னன் மன்னார்குடி திவாகரன் மீது முதன் முறையாக வழக்குப் பதிவாகி இருக்கிறது. சசிகலாவின் உடன்பிறந்த தம்பியான திவாகரன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம் நிழல் சக்தியாக கட்சியை வழி நடத்துபவர். சசிகலா - ஜெயலலிதா மோதல் துவங்கிய நாளில் இருந்து உளவுத்துறை வகையாக கண் பதித்து இருப்பது திவாகரன் மீதுதான்.

யாரிடமும் பேச மாட்டார்... குறிப்பாக மீடியாக்களை தவறியும் சட்டை செய்ய மாட்டார்... சசிகலாவைத் தவிர வேறு யாரிடமும் போனில் பேச மாட்டார். அதிகாரிகள் வட்டாரத்தில் ஆக வேண்டியதை தன் தரப்பு ஆட்கள் மூலமாக நோட் போட்டு அனுப்புவார். இதுதான் திவாகரன் பாணி...


கடந்த சட்டமன்றத் தேர்தலில் திவாகரன் தயவு மூலமாக சீட் பெற்றவர்கள் 45 பேர்களாம். அதில், அமைச்சர்கள் 7 பேர். அதனால் தான் அவர் மூலமாக கட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரும் என ஜெயலலலிதா நினைக்கிறார். எம்.நடராஜனைக் காட்டிலும் ஆபத்தான சக்தியாக ஜெயலலிதா கருதுவது திவாகரனைத்தான்.

எந்த வழக்கில் திவாகரனை வளைக்கலாம் என நினைத்த போலீஸ் தரப்பு, உள்ளூர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. திவாகரனின் பண்ணை இருக்கும் ரிசியூர் கிராமத்தை சேர்ந்த தமிழார்வன் மனைவி கஸ்தூரி என்பவர் மூலமாக திவாகரனுக்கு எதிராக புகார் வாங்கப்பட்டு உள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சனையை மையமாக கொண்ட வழக்கு இப்போது விஸ்வருபம் எடுத்திருக்கிறது.


மேலிட உத்தரவின் பேரில் திவாகரன் வீடு, செங்கலமலத் தாயார் கல்வி அறக்கட்டளை ஆகிய இடங்களில் போலீஸ் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்டமாக திவாகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரக்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

சசி - ஜெயா மாலை மாற்றும் நிகழ்வில் பின்னணியில் திவாகரன்

கைது நடவடிக்கை வரை வந்தால் திவாகரனின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தினர். 'திவாகரனை நம்பி கட்சியை விட்டு வெளியே வர இப்போதும் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை வைத்து திவாகரன் ஆட்டம் காட்டத் தொடங்கினால் , அப்புறம்தான் அம்மையாருக்குத் தெரியும்' என்கிறார்கள் பலரும்.

போலீஸ் அதிகாரிகள் சிலர், 'இதையேதான் நாங்களும் சொல்கிறோம்... திவாகரன் அப்படி எல்லாம் ஏதும் செய்யக் கூடாது என்பதற்காக தான் இந்த அதிரடி' என்கிறார்கள்.

- கும்பல்

வெற்றிடத்தை நிரப்ப வேல்முருகன் வேண்டும்!

Friday, 20 January 2012 1 comments



''பொங்கல் திருநாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் வேல்முருகன்...'' - கும்பல் ஸ்க்ரோலிங்கில் ஓடிய செய்தி உண்மையாகி இருக்கிறது. பொங்கல் திருநாளில் ''தமிழர் வாழ்வுரிமைக் கட்சி...'' என்ற பெயரில் புதியக் கட்சி தொடங்கி இருக்கிறார் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன். இளமைத் துடிப்பான இதயங்கள் அவருக்குப் பக்க பலமாக அணிதிரண்டு வருகிறார்கள்.


வேல்முருகன் வித்தியாசமான அரசியல்வாதி என்பது பலரும் அறிந்ததுதான். பா.ம.க.வில் இருந்தாலும், சாதியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். பிற சாதி நண்பர்களை அனுசரித்து நடப்பார். கட்சியின் கொள்கைகளைத் தாண்டியும் மனிதாபிமான உண்மைகளை ஒப்புக்கொள்வார். ஈழ விவகாரத்தில் ஐயா மருத்துவரே அடக்கி வாசித்த போதும், இவருடைய உணர்வுப்பூர்வமான துடிப்பை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், அதுவே அவருக்கு வினையாக முடிந்ததுதான் துயரம்!

''வேல்முருகன் தன்னை நல்லவர் என்று யாருக்கும் நிருபிக்க வேண்டியது இல்லை. அவர் நல்லவர் என்று மருத்துவர் அய்யாவுக்கே தெரியும். கள்வர்களுக்கு மத்தியில் நல்லவராக இருப்பதுதான் அவருக்கான சிக்கல்" என்கிறார்கள் நடுநிலையான பா.ம.க.வினர்.


அதேநேரம் , பண ரீதியான குற்றச்சாட்டுகளை அவர் மீது வாரி இறைக்கிறார்கள் மருத்துவர் ஐயாவின் ஆதரவாளர்கள். ''நெய்வேலி அனல்மின் நிலைய பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஐந்து கோடி ரூபாய் வேல்முருகனுக்கு கொடுத்தார். அந்தப் பணத்தைப் பற்றி வாயே திறக்காத வேல்முருகன், தேர்தல் முடிந்து மருத்துவர் ஐயா கேட்டபோது பிரசாரத்துக்கு செலவாகி விட்டதாகச் சொன்னார். இது மன்னிக்ககூடிய விஷயமா?" என்கிறார்கள் அய்யாவின் ஆதரவாளர்கள்.



''அய்யாவப் பத்தி தப்புத் தப்பா பேசினார். அன்புமணிக்கும் சில தவறான சகவாசங்ககளை ஏற்படுத்தினார். குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட வேல்முருகன் இப்படி எல்லாம் செய்தால், கட்சியை விட்டு நீக்காமல் பதவி உயர்வா கொடுப்பார்கள்?'' எனக் கேட்பவர்களும் உண்டு.

எது உண்மையோ... ஆனால், பா.ம.க.வில் இருந்த கடைசி நம்பகமான புள்ளியும் வெளியே வந்துவிட்டார் என்பதுதான் உண்மை. சாதியக் கூறுகளை வெறியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சமுக பிரச்சனைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதராக அந்தக் கட்சியில் இருந்த ஒரே ஆள் வேல்முருகன்தான். அவரும் வெளியே வந்துவிட்ட நிலையில், சாதியை மட்டுமே வைத்து அரசியல் நடத்தும் சங்கமாக இனி பா.ம.க. இருக்கும் என்பது மறுக்க முடியாதது.


அதே நேரம், வேல்முருகனுக்கு காத்திருக்கும் சவால்களுக்கும் குறைவு இல்லை. பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட போது வேல்முருகனுக்கு பல கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்தது. திருமாவளவன் நேரடியாகவே சிறுத்தைகள் கட்சிக்கு அழைத்தார்.


வேல்முருகனின் மிக முக்கிய நண்பரான நாம் தமிழர் சீமான், 'கட்சியில் என்னைவிட உயரிய பொறுப்பை நீ எடுத்துக்கொள். நீயும், அண்ணன் கொளத்தூர் மணியும் வந்து விட்டால் மூன்றாவது பெரிய சக்தி நாம்தான் என்றாகிவிடும்' என்றார்.

ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்தும் வேல்முருகனுக்கு அழைப்பு வந்தது. அத்தகைய அழைப்புகளை எல்லாம் புறந்தள்ளி தனி இயக்கம் கண்டதே வேல்முருகனுக்கு மகத்தான மகுடம் தான். ஆனாலும், ஏற்கனவே பா.ம.க.வைவிட்டு வந்தவர்கள் அண்ட இடம் இல்லாமல், ஒண்ட வழி இல்லாமல் அல்லாடி நிற்பதைப்போல அல்லாமல், வலு மிகுந்த சக்தியாக வேல்முருகன் உருவெடுக்க வேண்டிய நேரம் இது. கட்சிக்கான கட்டமைப்பை செவ்வனே ஏற்படுத்தி, மக்களோடு மக்களாக நிற்க வேண்டிய சூழல் நெருங்கி வந்திருக்கிறது.


நல்லவராக மட்டுமல்லாது, வல்லவராகவும் வேல்முருகன் இயங்க வேண்டிய நேரமிது. புயலில் கட்சி தொடங்கியவர் புயலாகவே மாற வேண்டும். வெட்டி வீழ்த்தப்பட்ட மண்ணாக மாறிக் கிடக்கும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் கண்ணீரை உடனடியாக துடைக்க வேல்முருகன் வீதிக்கு வர வேண்டும்.


ஏக்கருக்கு மூவாயிரம், நான்காயிரம் எனக் கொடுக்கப்படும் நிவாரணங்களை எல்லாம் தீர்வாக நினைக்காமல், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு முழுமையான மீட்சியை உருவாக்க வேல்முருகன் ஆக்கப்பூர்வமாக போராட வேண்டும். தானே புயலின் பாதிப்பு எத்தகையது என்பது இன்று வரை தமிழக மக்களுக்கோ அரசுக்கோ முழுமையாகப் புரியவில்லை. முப்பது நாற்பது வருட விவசாயத்தை ஒரே நாளில் இழந்து தவிக்கும் மக்களை உடனடியாகத் திரட்டி ஆக்கப்பூர்வ உதவிகளுக்கு குரல் கொடுக்க வேல்முருகன் காலத்துக்கு வரவேண்டும்.


துக்க வீட்டில் தான் நல்ல மனிதர்களை அடையாளம் காட்ட முடியும் என்பார்கள். இன்றைக்கு கடலூர் துக்க வீடாகத்தான் கிடக்கிறது... வேல்முருகன் நல்ல மனிதரா இல்லையா என்பதை அவருடைய போராட்டமும், அரசின் கவனத்தை ஈர்க்கும் பக்குவமும் தான் நிரூபிக்கும்.


அடுத்தகட்டமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் வேல்முருகன் இப்போதே தயாராக வேண்டும். வடமாவட்டங்களில் முதல்கட்ட ஒருங்கிணைப்பை உண்டாக்கி, ஒரு நாடளுமன்ற உறுப்பினரையாவது வேல்முருகன் பெற்றுக்காட்ட வேண்டும். பிறகு வரும் தேர்தல்களில் பார்க்கலாம் என வேல்முருகன் நினைத்தால், அந்த ஒத்திவைப்பே அவரை ஒன்றும் இல்லாத தலைவராக்கிவிடும்.


இவற்றை எல்லாம் கடந்து, வெறும் அரசியலுக்காக மட்டுமல்லாது, தமிழர் நலனுக்கான அத்தனை விசயங்களிலும் கொஞ்சமும் சமரசம் ஆகாத - பணத்துக்கும் வளைப்புக்கும் விலைபோகாத - கூட்டணிக்காக கொள்கை மறக்காத தலைவராக வேல்முருகன் தன்னை நிரூபிக்க வேண்டிய நேரமும் இதுதான். அதற்கான வயதும் வேல்முருகனுக்கு இருக்கிறது... வாய்ப்பும் இருக்கிறது. கண்ணியமிக்க தலைவர்களின் பங்களிப்பு தமிழகத்தில் காலியாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கும் தகைசார்ந்த தலைவனாகவே வேல்முருகனை நாம் பார்க்கிறோம். நம் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் பொறுப்பு அந்த இளங்குதிரைக்கு இருக்கிறது!

- கும்பல்

 
கும்பல் ... © 2011 | Designed by kumbal, in collaboration with , Uncharted 3 and MW3 Forum